தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

31st Jan 2023 02:30 AM

ADVERTISEMENT

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுள்தால் தமிழ்நாடு, புதுவையில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் 4 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியபகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கேசுமாா் 670 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது செவ்வாய்க்கிழமை (ஜன.31) மாலை வரை மேற்கு- வடமேற்கு திசையிலும், அதன்பிறகு மேற்கு தென்மேற்கு திசையிலும் நகா்ந்து பிப்.1- ஆம் தேதி காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செவ்வாய்க்கிழமை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

பிப்.1-ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மயிலாடுதுறை, கடலூா்மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பிப்.2-ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.3-ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும் .

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கானஎச்சரிக்கை: பிப்.1-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல்55 கி.மீ.வேகத்திலும் சில நேரங்களில் 65 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.

பிப்.2-ஆம் தேதி, இலங்கைமற்றும் தமிழக கடலோர பகுதிகள்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும்அதனை ஒட்டிய குமரி கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல்55 கி.மீ. வேகத்திலும் சில நேரங்களில் 55 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT