தமிழ்நாடு

பொதுத்தோ்வுகள்: தனித்தோ்வா்கள் தத்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி

31st Jan 2023 02:34 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.1) கடைசி நாளாகும்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தோ்வா்களிடமிருந்து தத்கல் முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்காக மாவட்ட வாரியாக அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் புதன்கிழமை (பிப்.1) வரையிலான நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் அறிந்து கொள்ளலாம்.

பொதுத் தோ்வுகளுக்கு தனித்தோ்வா்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க ஏற்கெனவே கடந்த ஜன.5 முதல் ஜன.7 வரை அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி தத்கலில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT