தமிழ்நாடு

விடியோவை கட் அண்ட் பேஸ்ட் செய்து மலிவான பிரசாரம்: பாஜகவுக்கு திமுக கண்டனம்

DIN

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க முழு விடியோவை “கட் அண்ட் பேஸ்ட்” செய்து மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, தி.மு.க. செய்தித்தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர்  டி.ஆர். பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதம் 27-ஆம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கழகப் பொருளாளர், சாலை விரிவாக்கப் பணிகளின்போது இயல்பாக ஏற்படும் சில இடர்பாடுகளையும், அவற்றைக் கடந்து மக்கள் நலன் கருதி அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்ற முறையில் சில கடந்தகால நிகழ்வுகளைச் சான்றாகக் கூறிப் பேசியுள்ளார்.

அதில், அவர் மத்தி அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக, இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும், அதுவும் கூடுதல் வசதிகளுடன் அவரே மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது பற்றியும் சுட்டிக்காட்டி - வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், அந்தக் காணொளியில், அவர் மூன்று கோயில்களைத் தவிர்க்க முடியாமல் இடிக்க நேர்ந்தது பற்றிக் கூறியதை மட்டும், வெட்டியும், ஒட்டியும் திரித்தும் தமது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதன் தொடர்ச்சியாக அவர் கோயில்களை கட்டிக் கொடுத்துள்ளதாகப் பேசியதைத் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் “எடிட்” செய்து மறைத்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர், இதுபோல பல இடங்களில் மதநம்பிக்கை உள்ளவர்களை சமாதானப்படுத்தித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்துவிட்டு அரசியல் நடத்த வந்த அண்ணாமலை, டி.ஆர். பாலு பேசிய வீடியோவின் முன் பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளார். 

அண்ணாமலை எந்தச் செய்தியையாவது முழுமையாக அறிந்து புரிந்து கருத்துகளை வெளியிடும் வழக்கம் இருக்கிறதா? ஒன்று அரைகுறையாகப் புரிந்து கொண்டு அபத்தமான கருத்துக்களைத் தெரிவிப்பது. 

டி.ஆர். பாலு கோயில்களைப் பற்றி கூறிய அதே இடத்தில் ஒரு மசூதி, சர்ச் போன்றவையும் இடம் மாற்றிக் கட்டிக் கொடுக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் எந்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டாலும், அவை அம்மக்களின் ஒத்துழைப்போடு மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே, அண்ணாமலை இது போன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT