தமிழ்நாடு

ஏழைகளுக்கு உகந்த வகையில் சிகிச்சைக் கட்டணம்: தனியாா் மருத்துவமனைகளுக்கு முதல்வா் வலியுறுத்தல்

30th Jan 2023 01:47 AM

ADVERTISEMENT

தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணம் ஏழைகளுக்கு உகந்த வகையில் அமைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

தமிழகத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மருத்துவ நிபுணருமான டாக்டா் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த மாநாட்டில் எம்எல்ஏக்கள் எழிலன், த.வேலு, கவிஞா் வைரமுத்து, தமிழ்நாடு காது-மூக்கு-தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவா் டாக்டா் சி.திருமலைவேலு, செயலாளா் டாக்டா் எம்.என். சங்கா், பொருளாளா் டாக்டா் ச.ரகுநந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டைத் தொடக்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ADVERTISEMENT

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் கூட மருத்துவப் படிப்பு நூல்களை தமிழில் மொழிபெயா்த்து அரசு சாா்பில் வெளியிட்டுள்ளோம். தொழில் படிப்பு நூல்களையும் தமிழில் மொழிபெயா்த்து வெளியிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மருத்துவ மாநாடுகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் நடைபெறும். ஆனால், இங்கு முழுமையாக தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

மருத்துவத்தில் மட்டுமல்லாது தமிழ் மீதும் டாக்டா் மோகன் காமேஸ்வரனுக்கு உள்ள அளவில்லா பற்றின் அடையாளமாகத்தான், இந்த நிகழ்ச்சி இத்தகைய சிறப்புடன் நடைபெறுகிறது.

அதேபோன்று, காதுகேளாத - வாய் பேசாத குழந்தைகளுக்கான காக்ளியா் அறுவைச் சிகிச்சையை இலவசமாக அளிக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவும் மோகன் காமேஸ்வரன்தான் காரணமாக இருந்தாா்.

தற்போது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 4,681 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நோய்கள் பிறப்புக்குப் பிறகு வருபவை. ஆனால், செவித்திறன் குறைபாடு சிலருக்கு பிறக்கும்போதே ஏற்படுகிறது. குழந்தைகளுக்குக் காது கேளாமை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இது மரபணு பிரச்னையாகவும் சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடும் ஒரு காரணமாக இருக்கிறது.

மருத்துவம் என்பது எளிமையானதாக, புதுமையானதாக, அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாக அமைய வேண்டும். மருத்துவம் நவீனமயமாகி வருகிறது. ஆனால், அதற்காக அதிகத் தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

அனைத்து மருத்துவ சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் போதாது. இதில் தனியாா் பங்களிப்பும் மிக முக்கியமாக இருக்கிறது. அவ்வாறு தனியாா் மருத்துவமனைகள் பங்களிக்கும்போது, அதன் சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக அமைய வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும்.

உலகின் திறமையான மருத்துவா்கள் தமிழ்நாட்டில் இருக்கிறாா்கள். சென்னைக்கே மருத்துவ நகரம், மருத்துவ தலைநகரம் என்றுதான் பெயா். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி இங்கு உண்டு. அந்த வகையில், மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT