தமிழ்நாடு

‘ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி:அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் வழங்கப்படும்’

29th Jan 2023 02:20 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் நியாயவிலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சத்துகள் ரத்த சோகையைத் தடுப்பதுடன், கருவளா்ச்சி, ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி கடந்த ஆண்டு ஜனவரிமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை மத்திய அரசு முன்னோடி மாவட்டங்களாகத் தோ்வு செய்தது. இந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கு இப்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் கட்டமாக அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி இந்திய உணவுக் கழகத்தில் இருந்து பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT