தமிழ்நாடு

புதிய மாணவர் சேர்க்கை நிறைவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி எங்கே?

28th Jan 2023 03:02 PM

ADVERTISEMENT


சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டாக தற்போது புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டடம் மட்டும் காணவில்லை.

ஏற்கனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கை பெற்ற மாணவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இரவல் பெற்று ஐந்தாவது மாடியில் ஒதுக்கப்பட்ட ஒரு வகுப்பறையில் கல்வி பயின்று வருகிறார்கள்.  இந்த கல்லூரி மதுரையிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதையும் படிக்க.. புதிய மாணவர் சேர்க்கை நிறைவு: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி எங்கே?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கான கட்டுமானப் பணிகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. அடிக்கல் நாட்டும் போது சொல்லப்பட்டபடி கட்டடம் கட்டப்பட்டிருந்தால், தற்போது மதுரை  எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது வெறும் நிலம் மட்டுமே இருக்கிறது.

இதையும் படிக்க.. அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட 3-ல் 2 பங்கு உரிமையாளர்கள் ஒப்புதலே போதும்!

மிகப்பெரிய செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில், நவீன வசதிகளுடன் ஆய்வகம், வகுப்பறைகள், நூலக வசதிகள் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு சேர்ந்த 50 மாணவர்களுடன், புதிதாக சேர்ந்த மாணவர்கள் சேர்த்து 100 எம்பிபிஎஸ் மாணவர்கள் அணிந்திருக்கும் வெள்ளை நிற கோட்டில்தான், அந்த கல்லூரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. 

நவீன ஆய்வகத்தில் பயில வேண்டிய இந்த 100 மாணவர்களும், அரசுக் கல்லூரி மாணவர்கள் படிக்கும் அதே ஆய்வுக் கூடத்தில்தான் இரவல் வாங்கி படிக்கிறார்கள். இரண்டாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள், தோப்பூரில் அமையவேண்டிய மதுரை  எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலையில், ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்து வருகிறார்கள்.

இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் நான்கு ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்கும் வரை நிச்சயமாக புதிய கல்லூரிக் கட்டடத்தைப் பார்க்க வாய்ப்பே இல்லை என்றுதான் தகவலறிந்த வட்டாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கரோனா பேரிடர் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தடை பட்டது. முதலில் ரூ.500 கோடியில் திட்டமிடப்பட்டது பிறகு அது மறுமதிப்பீடு செய்யப்பட்டபோது ரூ.1,900 கோடியாக அதிகரித்தது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நிறுவனம் நிதியை ஒதுக்க முன் வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, சரியான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 

மற்ற மாநிலங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் மத்திய அரசு தனது சொந்த நிதியை செலவழித்துக் கட்டப்பட்டவை. ஆனால், தமிழகத்தில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை, ஜப்பான் நாட்டிடமிருந்து பெரும் நிதியிலிருந்து கட்டப்படுகிறது. இதுவும், மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான காலதாமதத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT