தமிழ்நாடு

ஹேக் செய்யப்பட்ட மக்கள்நீதி மய்யம் கட்சி இணையதளம் 

27th Jan 2023 08:44 PM

ADVERTISEMENT

மக்கள்நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டதிலிருந்து அக்கட்சியின் கூட்டணி குறித்த பேச்சுகள் வேகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கின. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க | புகையிலைப் பொருள்களுக்கான தடை உத்தரவு ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு

ADVERTISEMENT

கமல்ஹாசனின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் காங்கிரஸ் கட்சியுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு பாதை அமைப்பதாக உள்ளதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி அக்கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாகவும், வலிமையாக பாஜகவை எதிர்க்க இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மநீம கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியானது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருத்து வேகமாக இணையத்தில் பரவ ஆரம்பித்தது. 

அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் இணையப் பக்கம் முடங்கியது. இதுகுறித்து விளக்கமளித்த மக்கள்நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் இணையப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், அதில் வெளியான செய்தி உண்மையல்ல எனவும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன் இணைவதாக தெரிவிக்கப்பட்ட கருத்து பொய்யானது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும் கட்சியின் இணையப் பக்கத்தை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT