தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசுப் பேருந்து தானாக இயங்கி விபத்து!

22nd Jan 2023 02:49 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் தானாக ஓடி சாலையை கடந்து அங்கிருந்த கடையின் சுவற்றில் மோதியது. இதில், நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகள் இறங்கிவிட்ட பின்னர், ஓட்டுநர் பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்து திடீரென தானாக இயங்கத் துவங்கியது. இதனைக் கண்டு பிரயாணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்துஓடி, பேருந்து வெளியேறும் சாலையைக் கடந்து, எதிரே இருந்த கடையின் சுவரில் மோதி நின்றது. இதில், அக்கடையின் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. 

பேருந்தின் முன் பகுதி சேதமடைந்தது பேருந்து தானாக இயங்கத் துவங்கியதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நகர்ந்து சென்றதாலும், சாலையில் அப்போது யாரும் பயணிக்காததாலும், பேருந்தின் உள்ளே யாரும் இல்லாததாலும் நல்வாய்ப்பாக பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. 

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, விபத்துக்குள்ளான பேருந்தை அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு அரசு பணிமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT