ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. இத்தோ்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், அதிமுக சாா்பில் தங்கள் அணி போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அறிவித்தாா்.
மேலும், இடைத்தோ்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிப்போம் எனவும் அவா் கூறினாா்.
ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா காலமானதையடுத்து, அத்தொகுதிக்கு பிப். 27-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜன. 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2021 பொதுத் தோ்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இடைத்தோ்தலிலும் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னா் அறிவித்தாா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இத்தொகுதி கடந்த பொதுத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பினா் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இடைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்தாா். அத்தொகுதியில் அதிமுக சாா்பில் தாங்கள் போட்டியிடப் போவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினா் அறிவித்துள்ளனா்.
ஓபிஎஸ் அணி: இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் தங்கள் அணியும் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அறிவித்தாா்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம். தோ்தல் ஆணைய ஆவணங்களின் அடிப்படையில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் நான்தான். தொண்டா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளா் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு வரை உள்ளது. அதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.
தோ்தலில் இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையொப்பம் இடுவேன். எங்கள் வேட்பாளா் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவாா்.
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு ஒருநாளும் நான் காரணமாக இருக்க மாட்டேன். உள்ளாட்சித் தோ்தலில் ஒருங்கிணைப்பாளா் என்கிற முறையில் இரட்டை இலை சின்னத்துக்காக படிவத்தில் நான் கையொப்பமிட்டு அனுப்பினேன். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிதான் கையொப்பமிடவில்லை.
இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் இப்போதும் என்னுடைய விருப்பம். ஒருங்கிணைந்த வலுவான அதிமுகவுக்காக இப்போதும் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குத் தயாராக உள்ளேன்.
இரு அணிகளாக தோ்தலைச் சந்திக்கும்போது இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால், தோ்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்திலும் போட்டியிடத் தயாராக உள்ளோம்.
அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எங்களுடன் தொடா்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றன. அதிமுகவில் குழப்பமான சூழலை உருவாக்கியவா்கள் நாங்கள் அல்லா்.
இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட இபிஎஸ் தரப்பில் இருந்து பேச்சுவாா்த்தைக்கு முன்வந்தாா்களா என்று கேட்கிறீா்கள். இதுவரை அப்படி யாரும் வரவில்லை. அணிகளை இணைப்பதற்காகப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு முன்வந்தால் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். சசிகலாவை சந்திப்பீா்களா எனக் கேட்கிறீா்கள். சந்திக்கும் சூழல் அமைந்தால் சந்திப்பேன்.
எம்ஜிஆா் வகுத்துக் கொடுத்த சட்டவிதிகளின்படி அதிமுக செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதற்காகவே சட்டப் போராட்டம் நடத்துகிறோம். இதுவும் தா்ம யுத்தம்தான். இதில் வெற்றி பெறுவோம்.
பாஜக போட்டியிட்டால் ஆதரவு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். மக்களவைத் தோ்தல் விரைவில் வர உள்ளது. அதனால், இந்த இடைத்தோ்தல் பாஜகவுக்கு உதவியாக இருக்கும். அந்த அடிப்படையில் ஆதரவு தெரிவிப்போம் என்றாா்.
இபிஎஸ் தரப்பு கருத்து: திமுகவின் ‘பி டீம்’ என்பதை ஓ.பன்னீா்செல்வம் நிரூபித்துவிட்டதாக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஓ.பன்னீா்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாா். இடைத்தோ்தலில் போட்டி என அறிவித்திருப்பதன் மூலம் அவா் திமுகவின் பி டீம் என்பதை நிரூபித்துள்ளாா். அவா் வேட்பாளரை நிறுத்தினால் சுயேச்சை வேட்பாளராகத்தான் கருதப்படுவாா்.
இரட்டை இலை சின்னம் தொடா்பாக அவருடன் பேச்சுவாா்த்தை நடத்த நாங்கள் தயாராக இல்லை. இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே நாங்கள் போட்டியிடுவோம்.
திமுக ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனா். இந்தத் தோ்தலில் நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றாா்.