தமிழ்நாடு

கோயிலைப் போன்ற தோற்றத்தில் உருவாகிறது ராமேஸ்வரம் ரயில் நிலையம் - புகைப்படங்கள்

DIN

தமிழகத்தில் அமைந்துள்ள மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ரயில் நிலையம், ராமநாதசுவாமி திருக்கோயிலின் தோற்றத்தில் உருவாக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தை மறுமேம்பாடு செய்யும் பணிகளுக்காக ரூ.112.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தெரிவித்திருக்கும் தகவலில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் மறுமேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. நிலப்பரப்பு ஆய்வு, அப்பகுதியை தூய்மைப்படுத்தி, புவியியல் தொழில்நுட்ப ஆய்வுக்குள்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுடன் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் மறுமேம்பாட்டுப் பணிகள் ரூ.112.69 கோடிச் செலவில் தொடங்கியுள்ளன. தமிழகத்தின்  ராமேஸ்வரம் ரயில் நிலையம் விரைவில் புதுப்பொலிவு பெறும் என்று பதிவிட்டுள்ளது. அதனுடன் புதிதாக உருவாகவிருக்கும் ரயில் நிலையத்தின் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் முக்கிய இடம்பெற்றிருக்கும் திருத்தலம், ராமேஸ்வரம். தென்னிந்தியாவில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க ஸ்தலமான இது, மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை கொண்டது. 

ராமவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்கு போன்ற வடிவத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில், ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.  புனித நீராட ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரம் வந்து செல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  தீவுப்பகுதிதான் ராமேஸ்வரம். இந்த ராமேஸ்வரம் என்ற தீவுக்குள் அமைந்திருக்கும் ரயில் நிலையத்தை மறுமேம்பாடு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்துக்குள் இருக்கும் மதுரை ரயில்வே பிரிவில் இந்த ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரும்.

தமிழ்நாட்டிலிருந்து, இந்த தீவுப் பகுதியை பாம்பன் ரயில் பாலம் வழியாகக் கடந்து ரயில்கள் புனிதத் தலமான ராமேஸ்வரத்தை அடைகின்றன. நாடடின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இது 1906ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பிறகு 2007ஆம் ஆண்டு மறுஆக்கம் செய்யப்பட்டது. இங்கு நாள்தோறும் சேது விரைவு ரயில் உள்ளிட்ட ஒரு சில விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. 

தற்போதைக்கு பாம்பன் ரயில் நிலையம் மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தனுஷ்கோடிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி முழுவதும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மண்டல அலுவலகத்திலிருந்து மத்திய ரயில்வேக்கு, ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு  வேளை அது சாத்தியமானால், சுற்றுலாப் பயணிகளுக்கும் தனுஷ்கோடியை காண வருவோருக்கும் மிக எளிமையான பயணத்தை அமைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT