தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் நான் போட்டியிடவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

21st Jan 2023 03:56 PM

ADVERTISEMENT


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும், இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து, இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தோ்தல் அறிவிப்புகளை புதன்கிழமை வெளியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கும் இடைத்தோ்தலை அறிவித்தது. இத்தொகுதியில், ஜனவரி 31ஆம் தேதி வேட்பு மனு தாக்கல், பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப் பதிவு, மாா்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, தோ்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளா்களைத் தோ்வு செய்ய தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. 

கடந்த முறை திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | நாசா காலண்டரில் பழனி மாணவியின் ஓவியம்: போட்டியில் வென்றது எப்படி?

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அல்லது அவரது இளைய மகன் சஞ்சய் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதனை ஏற்பேன். இந்த இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்தால் எனது மகன் சஞ்சய் போட்டியிடுவார் என இளங்கோவன் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் இத்தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் தமாக சாா்பில் போட்டியிட்ட யுவராஜா ஆகியோருக்கும் இடையே போட்டி நிலவியது. திருமகன் ஈவேரா 8,994 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில், 1,10,713 ஆண் வாக்காளா்களும், 1,16,140 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 23 பேரும் என மொத்தம் 2, 26, 876 வாக்காளா்கள் உள்ளனா். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT