தமிழ்நாடு

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் விழா: கிராமங்கள் தோறும் எருதாட்டம் கொண்டாட்டம்!

17th Jan 2023 01:24 PM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், கிராமங்கள் தோறும், பாரம்பரிய தாரை, தப்பட்டை, உறுமி மேளம் வாசித்து, காளைகளை கயிற்றில் பூட்டி விரட்டும் எருதாட்டத்துடன் காணும் பொங்கல் விழாவை கிராமப்புற மக்கள்  கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கலன்று, கிராமத்தின் மையத்திலுள்ள கோயில் மைதானத்தில் கூடும் மக்கள், பாரம்பரிய கலைகளான தாரை, தப்பட்டை, உறுமி மேளம் வாசித்தும், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும்  ஆடிப்பாடியும், மாலை நேரத்தில் காளைகளை கயிற்றில் பூட்டி, 'உரி' என குறிப்பிடப்படும் பூத தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்ட கட்டை வண்டியை காண்பித்து, காளைகளை உற்சாகப்படுத்தும் எருதாட்டம் நடத்தியும் காணும் பொங்கல் விழாவை கொண்டாடி பொழுது போக்கி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஊர்வலம் சென்ற ஜல்லிக்கட்டு காளை

ADVERTISEMENT

வாழப்பாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை கிராமங்கள் தோறு காணும் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி, வில்வனூர், செக்கடிப்பட்டி, பொன்னாரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் எருதுகள், ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்த விவசாயிகள், மேள வாத்தியங்கள் முழங்க ஆரவாரத்தோடு கோயில் மைதானத்திற்கு அழைத்துச் சென்றனர். 

எருதாட்டம் நடத்தி மகிழ்ந்த சிறுவர்கள்

இளைஞர்கள் காளைகளை கயிற்றில் கட்டி, உரி வண்டியை காண்பித்து எருதாட்டம் நடத்தி, குழந்தைகள், பெண்கள் உள்பட கூடியிருந்த மக்களை மகிழ்வித்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT