தமிழ்நாடு

திருப்பூரில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா: துரை வைகோ தொடக்கி வைத்தார்!

16th Jan 2023 01:56 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழாவை துரை வைகோ திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் ஆகியன சார்பில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை ஒட்டி ம.தி.மு.க. சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 25 ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவானது சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகே வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

இதில், திருப்பூர் மாநகராட்சி 24 ஆவது வார்டில் உள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பெண்கள் என மொத்தம் 5000 பேர் புதுப்பானைகளில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இந்த விழாவுக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளரும், 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆர்.நாகராஜ் தலைமை வகித்தார். இந்தப் பொங்கல் விழாவை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடக்கி வைத்துப் பேசியதாவது: 

ADVERTISEMENT

உலகுக்கு உணவு அளித்திடும் உழவன் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுதான் பொங்கல் விழா. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களைக் கடந்து தமிழராக ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான் பொங்கல் திருவிழாவாகும். தமிழகத்தில் அரை நூற்றாண்டாக சமத்துவப் பொங்கலை மிகவும் சிறப்பாக வைகோ நடத்திக் கொண்டிருக்கிறார். 

இதனைப் பின்பற்றி மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டில் 25 ஆவது வெள்ளி விழா ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில், 5000 குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர். இதன் முக்கிய நோக்கம் ஏழை, எளிய மக்கள் சமூக நல்லிணக்கத்துடன் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதுதான் என்றார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்துப் பேசுகையில், தமிழக ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் மாநிலத் தலைவராக செயல்படுவது மட்டுமின்றி சனாதன சிந்தனைகளை வளர்க்க செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மக்களுக்குத் தேவையான பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுக்காமல் அரசியல் கட்சி தலைவர் போல் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும். 

ஆளுநர் என்பவர் எந்த இயக்கத்தைச் சாராமலும், சித்தாந்தத்துக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் நலனுக்குகாக செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் சுயநல நோக்கத்துடன் ஒரு இயக்கத்துக்காக செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். கோவையில் ஒரு யோக மையத்தில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த மையம் வனவிலங்கு சட்டங்களுக்குப் புரம்பாக செயல்பட்டு மையத்தை நடத்தி வருகின்றனர்.

பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திமுக, அதிமுக, மதிமுக ஆகிய கட்சிகள் எல்லாம் கொள்கை வழியில் திராவிட இயக்கங்கள்தான். அதிமுக இயக்கம் பிளவுபட்டதற்கு யார் காரணம் என்பதை அக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் யோசனை செய்து பார்க்க வேண்டும் என்றார்.  
இந்த விழாவில், மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
 
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் சமத்துவப் பொங்கலை தொடக்கி வைக்கிறார் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலர் துரை வைகோ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT