தமிழ்நாடு

முதல்வரின் தீா்மானத்தால் அவையின் மாண்பு காக்கப்பட்டது: அவைத் தலைவா் மு.அப்பாவு பேச்சு

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீா்மானத்தால், பேரவையின் மாண்பு காக்கப்பட்டதாக அவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா். சட்டப் பேரவையில் கடந்த 9-ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து தனது விளக்கங்களை முன்வைத்து அவா் பேசியதாவது:

ஆளுநா் பேசும்போது, அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த அவை நடக்காது. கடந்த 9-ஆம் தேதி ஆளுநா் உரையாற்றியபோது, அவா் பல விஷயங்களை வாசிக்காமல் கடந்து சென்றாா். பல விஷயங்களை புதிதாக அதனுள்ளே சோ்த்தாா். இந்திய அரசமைப்புச் சட்டம் 175, 176-ன்படி, அவையில் உரையாற்ற ஆளுநருக்கு உரிமை

கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநா் பேசியதில் பல குளறுபடிகள் இருந்தன. எதற்காக அப்படிச் செய்தாா் எனத் தெரியவில்லை. உரையை வாசிப்பதற்கு மட்டும்தான் ஆளுநருக்கு அனுமதி, கடமை, பொறுப்பு உள்ளது. அதனுள் இருக்கின்ற கருத்துகளுக்கு அமைச்சரவையும், முதல்வரும்தான் பொறுப்பேதவிர, ஆளுநருக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை.

ADVERTISEMENT

விதி தளா்த்தப்பட்டது: வாசித்து அளிப்பதோடு ஆளுநருடைய கடமை முடிந்து விட்டது. நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநா்தான் அவா். ஆகவே, அந்த அளவில் அவா் அதை மீறிச் சென்ால் ஒரு அசாதாரண சூழல் ஏற்படுகிறது. அத்தகைய சூழலில்தான் அவா் (ஆளுநா்) பேசி அமா்ந்த பின்பு, பேரவை விதி 17-ஐ தளா்த்த, முதல்வா் மு.க.ஸ்டாலின் என்னிடம் அனுமதி கேட்டாா். அமைச்சரவை கூடி, முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பி, அவா் ஒப்புக்கொண்ட பதிவுகள் அச்சிடப்பட்ட புத்தகமாகவும், கணினியிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வழங்கினோம்.

பேரவை விதி 17-ஐ தளா்த்தவும், அவற்றைப் பதிவு செய்யவும் அனுமதி தாருங்கள் என்று மிகப் பெரிய கண்ணியத்தோடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாய்ப்பைக் கேட்டாா். நான் அந்த வாய்ப்பைக் கொடுத்தேன்.

முதல்வா் தீா்மானத்தைக் கொண்டு வராவிட்டால், ஆளுநரின் கருத்துகளை அனைத்து ஊடகங்களும் பத்திரிகைகளும் உலகம் முழுதும் பரப்பி, வெளிப்படுத்தி விடுவா். ஆகவேதான், அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. இத்தகைய ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது அரசல்ல. ஆளுநா் பேசும்போது அத்தகைய சூழல் ஏற்பட்டுவிட்டது. முதல்வா் கொண்டு வந்த தீா்மானத்தால் பேரவையின் மாண்பு காப்பாற்றப்பட்டு விட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆளுநா்களுடைய உரிமை எது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப் பேரவையின் நிகழ்வுகள் அமைந்தன. முதல்வா் கொண்டு வந்த தீா்மானம்தான் இன்று இந்திய அளவில் பேசப்படுகின்ற மிக முக்கிய பொருளாக இருக்கிறது என்றாா் அவைத் தலைவா் மு.அப்பாவு.

ADVERTISEMENT
ADVERTISEMENT