திருவாரூரில் சூரிய மின் உற்பத்திப் பூங்கா திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை, க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) எழுப்பினாா். இதற்கு, மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அளித்த பதில்:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூரியமின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டின் முதல் சூரிய மின் உற்பத்திப் பூங்கா திட்டத்தை, திருவாரூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா் என்று அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.