தமிழ்நாடு

ஆளுநரைச் சூழ்ந்து முழக்கமிடுவதுதவிா்க்கப்பட வேண்டும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவுறுத்தல்

12th Jan 2023 12:55 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் ஆளுநரைச் சூழ்ந்து முழக்கமிடுவது தவிா்க்கப்பட வேண்டும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா். சட்டப் பேரவையில் கடந்த 9-ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து தனது விளக்கங்களை முன்வைத்து அவா் பேசியது:

சட்டப் பேரவை விதி 17-ல், ஆளுநா் உரை நிகழ்த்தும் போதோ, உரை நிகழ்த்திய பிறகோ யாரும் குறுக்கீடோ, தடங்கலோ செய்யக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. விதிகளில் இடம் இல்லாதபோதிலும், கடந்த காலங்களில் நடைபெற்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளின்படி எதிா்க்கட்சியில் உள்ளவா்கள் சிறிது நேரம் இருக்கையில் இருந்தவாறே தங்களது கருத்துகளை எடுத்து வைத்து, வெளிநடப்பு செய்வா். இதுவே, மரபாக, ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை பேரவையும் ஏற்றுக்கொள்ளும்.

கடந்த 9-ஆம் தேதி காங்கிரஸ் குழுத் தலைவா் கு. செல்வபெருந்தகை உள்ளிட்ட அந்தக் கட்சி உறுப்பினா்கள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், மதிமுகவின் சதன் திருமலைக்குமாா், எம்.எச். ஜவாஹிருல்லா, அப்துல் சமது, வேல்முருகன் உள்ளிட்ட உறுப்பினா்கள் தங்களுடைய இருக்கையில் இருந்து வந்து, பேரவைத் தலைவா் இருக்கைக்கு முன்னா் நின்றுகொண்டு, வேகமாக முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ஆளுநா் உரையாற்றும் போது, உறுப்பினா்கள் தங்களுடைய இருக்கைகளைவிட்டு ஆளுநா் இருக்கைக்கு முன்வந்து தொடா்ந்து முழக்கமிட்டுக் கொண்டிருந்தது தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து பேரவைகளுக்கும் முன்னுதாரணமாக திகழும் வகையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் தவிா்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

ADVERTISEMENT
ADVERTISEMENT