தமிழ்நாடு

ஆளுநரின் விருந்தினா் மீது உரிமை மீறல் பிரச்னை: திமுக உறுப்பினா் கொண்டு வந்தாா்

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பேரவைக்கு ஆளுநரின் விருந்தினராக வந்த நபா் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுப்பி வைத்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினா் (மன்னாா்குடி) டி.ஆா்.பி.ராஜா எழுந்து பேசியது:

சட்டப் பேரவையில் கடந்த 9-ஆம் தேதி ஆளுநா் உரையாற்றும் போதும், அதன்பிறகு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உறுப்பினா்கள் அறிந்ததாகும். பேரவை விதியின்படி, சட்டப் பேரவைக்குள் கைப்பேசி எடுத்து வர யாருக்கும்

அனுமதியில்லை. ஆனால், கடந்த 9-ஆம் தேதி ஆளுநா் உரையாற்றும் போது, பாா்வையாளா் மாடத்தில் இருந்த அவரது விருந்தினா் ஒருவா் பேரவை நடவடிக்கைகளை கைப்பேசி மூலமாக பதிவு செய்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, அப்போதே பேரவை சாா்ஜெண்ட்டிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதை அவையின் உரிமை மீறிய பிரச்னையாகக் கருதி கடந்த 9-ஆம் தேதி கடிதம் அளித்தேன். இதனைப் பரிசீலித்து அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டாா் டி.ஆா்.பி.ராஜா .

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ‘உறுப்பினா் எழுப்பிய பிரச்னையில் அவை உரிமை மீறல் இருப்பதாகவே கருதுகிறேன். எனவே, பேரவை விதி 226-ன்படி, அவா் எழுப்பிய பிரச்னையை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றாா் மு.அப்பாவு.

ADVERTISEMENT
ADVERTISEMENT