தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (பிப். 28) தொடங்கி வைக்கிறாா்.
மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்களுக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணைகளையும் அவா் வழங்குகிறாா்.
முதல்வா் அடிக்கல் நாட்டும் திட்டங்களில் ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 4,308 மருத்துவா்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக, சிலருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவத் துறையில் காலிப் பணியிடம் இல்லாத வகையில், அனைத்து மருத்துவா்கள் பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்புகளையும், புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டமைப்புகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூா்புரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறாா் என்றாா் அவா்.