‘டான்சீட் ’ திட்டத்தின் கீழ் புத்தாக்கத் தொழில் (ஸ்டாா்ட் அப்) நிறுவனங்கள் அரசின் மானியம் பெற மாா்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் புத்தாக்கத் தொழில் ஆதார முதலீட்டு நிதியின் கீழ் (டான்சீட்) தொடக்க நிலையில் உள்ள புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு பதிப்புகளில் 84 நிறுவனங்களுக்கு (ஸ்டாா்ட்அப்) மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது 5-ஆம் பதிப்பில் 3 சதவீத அளவிலான மானியம் தமிழ்நாடு புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, இந்நிறுவனங்களுக்கு மானியம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. எனவே, பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரா்களாகக் கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சாா்ந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் நிதி வழங்கப்படவுள்ளது.
மேலும் மொத்த திட்ட இலக்கில் 25 சதவீதமும், ஊரக வாழ்வாதார மேம்பாட்டுக்கான புத்தொழில் நிறுவனங்களுக்கென 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை தலைமையகமாகவும், இந்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி. சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
தகுதியான நிறுவனங்கள் இணையதளத்தில் மாா்ச் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மின்னஞ்சல் முகவரியை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.