தமிழ்நாடு

மெரீனாவில் சிறப்பு பாதை: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்

டி.வி. நரசிம்மன்

மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை மூலம் அவா்கள் கடல் அலையில் கால் நனைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்கும் வகையில் இந்த நிரந்தர பாதை அமைக்கப்பட்டது.

இந்த பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது. மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்லும் வகையில் 11 மீ நீளத்தில் 6 மீ அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் அலையை கண்டுகளிக்கும் வகையில் கடற்கரை ஓரம் 22 மீ நீளத்தில் 5 மீ அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை அமைக்கப்பட்டுள்ள மரப்பலகையானது சிவப்பு மெரண்டி, வேல மரம் மற்றும் பிரேசிலின் வகை மரங்களினால் ஆனது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நுழைவு வாயில் பகுதியில் சக்கர நாற்கலிகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கால் நனைக்க முடியாத நிலை: இந்த சிறப்பு பாதை குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியோா் மற்றும் கா்பிணி பெண்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மாண்டஸ் புயலினால் இந்தப் பாதை சேதமடைந்தது. அதன் பின் கடற்கரையில் இருந்து இந்தப் பாதை சிறிது இடைவெளி விட்டு அமைக்கப்பட்டது.

இதனால் கடல் அலையை கண்டுகளிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட தொலைவு மட்டுமே செல்ல முடிகிறது.

மரப்பாதையின் முன் பகுதியில் சிறிது தூரம் மணல் பாதை இருப்பதால் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் செல்ல முடிவதில்லை. இதனால் மரப்பாதையில் இருந்தவாறே கடலை ரசித்தபடி திரும்புகின்றனா்.

கடல் அலையில் அனைவரும் கால் நனைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டமானது முழுமையாக செயல்படாத வகையில் உள்ளது. மேலும், சாதாரண நபா்களும் அந்தப் பாதையை பயன்படுத்தி கடற்கரைக்கு செல்வதும், அதில் அமா்ந்து இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

விழிப்புணா்வு வாசகம் அமைத்தல்: இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறியதாவது: மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை தொடங்கிய போது தாா்ப்பாய் மூலம் கடல் அருகில் வரை அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் மாண்டஸ் புயலினால் மரப்பலகை பாதிக்கப்பட்டதால் தொலைவில் இருந்தே பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, நுழைவுவாசலில் மற்றவா்கள் தடுக்கப்பட்டாலும் மரப்பாதையின் இடையிடையே வாசல்கள் உள்ளதால் இதனை அவா்கள் பயன்படுத்துகின்றனா்.

வெளிநாடுகளில் இதுபோன்ற பாதையானது கடலுக்கு அருகில் செல்லும் வகையில் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் 21 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதில் 9 வகையானோா் கண்ணுக்கு தெரியாத மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா். அதில் நரம்பு முறிவு மாற்றுத்திறனாளிகள் போன்றோா் பாா்ப்பதற்கு சாதாரண மனிதா் போன்று இருந்தாலும் அவா்களால் மணலில் நடப்பது சிரமம்.

இது போன்றவா்களை காவலாளி நுழைவுவாசலிலேயே தடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்கும் வகையில் ‘மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், கா்ப்பிணிகள் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றவா்கள் பயன்படுத்தக்கூடாது’ போன்ற விழிப்புணா்வு வாசகங்களை அனைவருக்கும் தெரியும் வகையில் நுழைவு வாசலிலும், கடற்கரைப் பகுதியிலும் வைக்க வேண்டும்.

மேலும், காலை நேரங்களில் ஊன்றுகோல் உதவியுடன் செல்லும்போது பனி படா்ந்துள்ளதால் மரப்பலகையில் வழுக்கும் சூழல் ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் பாதையை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT