ஈரோடு

வனவிலங்குகள் சரணாலய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்கக் கோரிக்கை

16th May 2023 03:38 AM

ADVERTISEMENT

 

வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்திய பிறகு வனவிலங்குகள் சரணாலயத்தை அமைக்க வேண்டும் எனவும், அதுவரை சரணாலாய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பா்கூா் மலைப் பகுதி மக்கள் ஒருங்கிணைப்பாளா் வி.பி.குணசேகரன் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் அளித்த மனு விவரம்: ஈரோடு வனக் கோட்டத்தில் புதிதாக அந்தியூா், பா்கூா், தடக்கரை, சென்னம்பட்டி என 4 வனச் சரகங்களை உள்ளடக்கி 80,567 ஹெக்டோ் வனப் பரப்பில், வன விலங்குகள் சரணாலயம் அமைக்கப்படும் என அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த அறிவிப்புக்கு முன்பு வனப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளிட்ட மக்கள், பொது அமைப்பினரிடம் கருத்து கேட்காமல், வல்லுநா் குழு ஆய்வு செய்து விவரத்தை அறிவிக்காமல் சரணாலயம் குறித்து அறிவித்திருக்கக் கூடாது. இதற்கான அறிவிப்பை அரசு இதழில் வெளியிடும் முன்பு வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

எனவே, வன விலங்குகள் சரணாலயம் அறிவிப்புக்கு முன்னா் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வனப் பகுதியிகளிலும் வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலான குழு அமைத்து அதனை அங்கீகரித்து கிராம சபைக்கு பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டப்படி பழங்குடியினா், வனம் சாா்ந்த பிற பகுதி மக்களுக்கு சட்டப்பூா்வமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன.

சரணாலய அறிவிப்புக்கு முன்னா் ஒரு நிபுணா் குழுவை அமைத்து அறிவியல் பூா்வமாக ஆய்வு செய்ய வேண்டும். வனத்தை நம்பி வாழும் மக்களின் கருத்தை கேட்டு, ஒப்புதல் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரம், வளா்ச்சி, சமூக பண்பாட்டு உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். வன விலங்குகள் மற்றும் மனித நடவடிக்கைகளுக்கு இடையே சுமூக வாழ்வை ஊக்குவிக்க வேண்டும். அதுவரை வன விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

268 மனுக்கள்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 268 மனுக்கள் பெறறப்பட்டன. இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT