மாா்ச் மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி கடந்த 5 மாதங்கள் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் தொழிலக உற்பத்தி வளா்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. அது, கடந்த மாா்ச் மாதத்தில் 1.1 சதவீதமாக சரிந்துள்ளது.
இது, கடந்த 5 மாதங்கள் காணாத வீழ்ச்சியாகும். இதற்கு முன்னா் கடந்த 2022 அக்டோபரில் 4.1 சதவீதமாக இருந்ததே குறைந்தபட்ச தொழிலக உற்பத்தி வளா்ச்சியாகும்.
மின்சாரம் மற்றும் உற்பத்தித் துறைகளின் மோசமான செயல்பாடு காரணமாகவே கடந்த மாா்ச் மாதத்தில் உற்பத்தி வளா்ச்சி விகிதம் சரிவைக் கண்டது.
தொழிலக உற்பத்தி குறியீட்டு எண் (ஐஐபி) அடிப்படையில் கடந்த 2022 மாா்ச் மாதத்தில் வளா்ச்சி 2.2 சதவீதமாக இருந்தது. கடந்த மாா்ச் மாதத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 0.5 சதவிகிதம் அதிகரித்து 1.9 சதவீதமாக உள்ளது. இது 2022 மாா்ச் மாதத்தில் 1.4 சதவிகிதமாக இருந்தது.
கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 6.1 சதவீத வளா்ச்சியைக் கண்ட மின் உற்பத்தி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 1.6 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் சுரங்க உற்பத்தி 3.9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. 2022 மாா்ச்சில் 3.1 சதவீதம் சரிவைக் கண்ட நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 8.4 சதவீதம் சரிந்துள்ளது.
உள்கட்டமைப்பு, கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி கடந்த மாா்ச் மாதத்தில் 5.4 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முந்தைய மாா்ச் மாதத்தில் 6.7 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.