சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 வாரங்களில் பொது இடங்கள், நடைபாதைகளில் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் மண்டல அலுவலா் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வாரத்தில் 3 நாள்கள் அதாவது திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பு, கட்டடக் கழிவுகளை அகற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 3 வாரத்தில் மாநகராட்சி அலுலா்களுடன் காவல் துறையின் இணைந்து மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் பொது இடங்கள், நடைபாதைகளில் 563 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள், 1,366 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் அதிகப்பட்சமாக அடையாறு மண்டலத்தில் 278 ஆக்கிரமிப்புகளும், கோடம்பாக்கத்தில் 246 ஆக்கிரமிப்புகளும், அண்ணா நகரில் 223 ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாதவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.