தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு பலத்தைக் காட்டும் முயற்சியில் தேமுதிக!

பெ. விஜயபாஸ்கர்

ஈரோடு: மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் சேருவதற்கு பலத்தைக் காட்ட ஈரோடு இடைத்தேர்தல் களத்தை தேமுதிக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 

ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே தான்  போட்டி நிலவுகிறது. ஆளும்கட்சியின் அசுர பலத்துடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், அதிமுகவின் வலிமையான கட்டமைப்பால் அதிமுக வேட்பாளரும் களத்தில் கடும் போட்டியில் உள்ளனர். 

இந்த தேர்தலில் தேமுதிக மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.  இந்த தேர்தலில் பெறப்போகும் வாக்குகளை வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு பிரதான கட்சிகள் அழைக்கும் என்பது தேமுதிகவின் கணக்கு. 

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாக்காளர்களின் பாதம் பணிந்து வாக்குச்சேகரித்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகி.

 
சரிந்த செல்வாக்கு: 

2009இல் 10 சதவீதம் வரை வாக்குகளை வைத்திருந்த தேமுதிக இப்போது 2 சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது. தொடர் தோல்விகளால், கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சியாக தேமுதிக மாறிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருபக்கம் திமுகவுடனும், இன்னொரு பக்கம் அதிமுகவுடனும் கூட்டணி பேரம் பேசிக் கொண்டிருந்தது அதன் வலிமையைக் குறைப்பதாக அமைந்தது. நகரம் முதல் கிராமப் பகுதிகள் வரை தொண்டர்கள் பலத்தைக் கொண்டிருந்த தேமுதிகவின் வாக்கு பலம் இப்போது தகர்ந்துவிட்டது.  

2016 தேர்தலுக்குப் பிறகு பலர் அதிமுகவிலும், திமுகவிலும் போய் சேர்ந்துவிட்டனர். இதனால், தேமுதிக அமைப்பு ரீதியாக உடைந்து பலம் குறைந்துவிட்டது. இதெற்கெல்லாம் மூலகாரணம் விஜயகாந்த்தின் உடல் நலம் குன்றியதுதான். 

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை பெறப்போகும் வாக்குகளை வைத்து கட்சியை வளர்ச்சியை நோக்கிச் அழைத்துச்செல்ல முடியும். மக்களவைத் தேர்தலில் தங்களை பிரதான கட்சிகள் கூட்டணிக்கு அழைக்கும் என தேமுதிக கருதுகிறது. 

இதுகுறித்து ஈரோடு தேர்தல் களத்தில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:  2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கூட தேர்வு செய்யப்படாத நிலையில் தொண்டர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். கட்சியின் வாக்குசதவீதம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.  சரிந்த செல்வாக்கை மீட்டெடுக்க வரும் மக்களவைத் தேர்தலில் வலிமையான கட்சியுடன் கூட்டணி சேர தேமுதிக திட்டமிட்டுள்ளது. 

2011இல் அதிமுக கூட்டணியில் நின்று வென்றிருந்தாலும், இயல்பாகவே தேமுதிகவுக்கு ஓரளவுக்கு பலம் இருந்தது. இந்த தொகுதியில் முத்துசாமியை எதிர்த்து நின்று வி.சி.சந்திரகுமார் வெற்றிபெற்றார். முரசு சின்னத்திற்கான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. விஜயகாந்த்திற்கு வட மாவட்டங்களைப் போலவே கொங்கு மண்டலத்திலும் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. 2011இல் தேமுதிகவில் நின்று வென்ற வி.சி.சந்திரகுமார் இப்போது திமுகவுக்கு வந்துவிட்டார். அப்போது இருந்ததை விட தேமுதிகவின் வாக்கு பலம் சரிந்துவிட்டது என்றாலும், இப்போதும் ஓரளவுக்கு வலிமை இருக்கவே செய்கிறது. 

சமூக வாக்குகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டே முதலியார் சமூகத்தை சேர்ந்த எஸ்.ஆனந்த்தை வேட்பாளராக தேமுதிக களமிறக்கி இருக்கிறது.  காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் முதலியார் சமூக வாக்குகளை பெருமளவு பெறுவார்கள் என்றபோதிலும்,  தேமுதிகவும் இச்சமூக வாக்குகளை ஓரளவு பெற வாய்ப்புள்ளது. 

விஜயகாந்த் வராவிட்டாலும் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்வது தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

வார்டுக்கு 250 முதல் 400 வாக்களர்கள்: 

இடைத்தேர்தலில் 33 வார்டுகளுக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பொறுப்பாளர் என வெளி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எல்.கே.சுதீஷ் கடந்த 10 நாள்களாக ஈரோட்டிலேயே முகாமிட்டுள்ளார்.  குறைந்தது 10,000 வாக்குகளையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தலில் பணியில் தேமுதிக கவனம் செலுத்தி வருகிறது.  

இதற்காக ஒவ்வொரு வார்டிலும் விஜயகாந்தின் தீவிர விசுவாசிகள் அடையாளம் கண்டுள்ளனர்.  வார்டுக்கு 250 முதல் 400 வாக்காளர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த வாக்காளர்கள் பணத்துக்காக வேறு கட்சிக்கு வாக்களிக்காமல் தடுக்க பிரதான கட்சிகள் எடுக்கும் அதே ஆயுதத்தை தேமுதிக எடுத்துள்ளது.  வெளி மாவட்டங்களிலிருந்து வாக்குச்சேகரிப்புக்கு வந்துள்ள நிர்வாகிகள் வீடுவீடாக சென்று முதியவர்களின் பாதம் பணிந்து வாக்குச்சேகரிக்கின்றனர். 

தன்னலமற்ற தொண்டர்களின் களப்பணி, தேர்தல் வியூகம் மூலம் 10,000க்கும் மேல் வாக்குகளை பெற முடியும். இதன் மூலம் வரும் கவனம்பெற்று, வரும் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் தங்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரும் என தேமுதிக நம்புகிறது.

தேமுதிக போடும் கணக்கு சரியான கணக்காகுமா என்பது வரும் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT