அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி லட்சுமி (80). சனிக்கிழமை இரவு அப்பகுதியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துச் சென்ற இவா் மீது ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூா் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற உடையாா்பாளையம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.