தமிழ்நாடு

 பழனியில் தெப்பத் தேர் உலா: தைப்பூசத் திருவிழா நிறைவு

DIN

பழனியில் தைப்பூசத் திருவிழா தெப்பத்தேர் உலாவுடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
 பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் திருவிழாவாக நடைபெற்று வந்தது. இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை முத்துக்குமாரசுவாமி, தேவசேனா ஊடல் வைபவம் நடைபெற்றது.
 இதையொட்டி, காலையில் புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வடக்கு ரத வீதி அருகே உலா வரும் போது, வள்ளியை திருமணம் செய்து கொண்ட செய்தி அறிந்து தேவசேனா கோபித்துக் கொண்டு அவரிடமிருந்து பிரிந்து கோயிலுக்கு வந்து நடையைப் பூட்டிக் கொண்டார். இதையடுத்து, கோயிலுக்குத் திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வீரபாகுவை தூது அனுப்பினார். அவர், தேவசேனாவை சமாதானம் செய்து கோயில் நடையைத் திறக்க வைத்தார்.
 இந்த ஊடல் வைபவத்துக்கான சமாதானத் தூதுப் பாடல்களை நாகராஜ் சுவாமி பாடினார். கோயில் நடை திறக்கப்பட்டப் பிறகு, கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமி வள்ளி, தேவசேனா சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 தெப்பத் தேர் உலா: இதைத் தொடர்ந்து, இரவில் பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள ஆயிரவாழ்செட்டிகள் தெப்பக்குளத்தில் தெப்பத் தேர் உலா நடைபெற்றது.
 இந்த விழாவையொட்டி, தெப்பத்தின் நடுவில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து, வாணவேடிக்கைகள் முழங்க தெப்பத் தேர் உலா நடைபெற்றது.
 இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், இரவு 11 மணியளவில் திருக்கொடியிறக்கப்பட்டு, தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT