தமிழ்நாடு

புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் சேலம் முதலிடம்!

8th Feb 2023 06:17 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டத்தில் 2ஆம் கட்டமாக 6,090 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை மற்றும் "புதுமைப் பெண்" பெட்டகப் பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், வழங்கி உரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்" 2ஆம் கட்ட திட்டத்தினை இன்று (08.02.2023) திருவள்ளூரில் இருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அவர்கள் 2ஆம் கட்டமாக 6,090 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை மற்றும் "புதுமைப் பெண்" பெட்டகப் பைகளை வழங்கினார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

ADVERTISEMENT

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்துள்ளார். 

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனைக் காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாவும், கல்வியறிவு. தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக, அடித்தளமாக புதுமைப் பெண் 2ஆம் கட்ட திட்ட்டத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அரசின் அனைத்து திட்டங்களையும் முன்னனியாக நடைமுறை படுத்தி வருகின்றோம். அதே போல் தான் புதுமைப் பெண் திட்டத்திலும் முதல் கட்டத்தில் 8,016 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது 2ஆம் கட்டத்தில் 6,090 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர். தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்றார்.

தமிழ்நாடு அரசால் இது போன்று பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவியாகிய நீங்கள் உயர்கல்வியை நன்றாக படித்து தகுதியான வேலைகளில் சேர வேண்டும். படிக்கும் காலத்தில் திறமையோடு செயல்பட கூடிய எண்ணத்தை உறுவாக்கி கொள்ள வேண்டும். கல்லூரி காலத்தை படிப்பிற்கும், உயர்வுக்கும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த்தை போல படிக்கும் காலத்தில் கவனச் சிதறல்கள் இல்லாமல் நன்றாக படிக்க வேண்டும் என்ற என்னத்தை மட்டும மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண் கல்விக்காக எந்த பெற்றோரும் பொருளாதார ரீதியில் சுமையாகக் கருதக்கூடாது என்பதற்காகவும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டும், அவர்களுக்கு உயர் கல்வியை உறுதி செய்யும் வகையிலும், பாலின இடைவெளியைச் சமன் செய்யும் பொருட்டும் இந்த புதுமைப் பெண் திட்டம் தொடர்ந்து 2ஆம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. புதுமைப் பெண் திட்டமானது மாணவியர்களின் அறிவு வளர்ச்சிக்கும். சமூக வளர்ச்சிக்கும் பெரும் அளவில் உதவி செய்யும் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கார்மேகம் அவர்கள் தெரிவித்தார்.

இதையும் படிக்க: குட்கா, பான் மசாலா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

இந்நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரா.ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ரா.அருள், சேலம் வருவாய் கோட்டாட்சியர் சி.விஷ்ணுவர்த்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ரா.முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் நா.ரஞ்சிதாதேவி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT