தமிழ்நாடு

குட்கா, பான் மசாலா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

8th Feb 2023 05:58 PM

ADVERTISEMENT

புகையிலை பொருள்களுக்கானத் தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா். ஆண்டுதோறும் இதுதொடா்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிா்த்தும், குற்ற நடவடிக்கையை எதிா்த்தும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதேபோல், தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்தும் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ‘உணவின் பாதுகாப்பு, தரத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகச் சுட்டிக்காட்டப்படவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில் புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவது, முறைப்படுத்துவது பற்றியும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இவ்விரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, உணவுப் பாதுகாப்பு ஆணையா் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா். இதன்மூலம், தமிழகத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது.

இதையும் படிக்க: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன உயிரினக் கணக்கெடுப்பு

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT