தமிழ்நாடு

மூன்று மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

8th Feb 2023 02:58 PM

ADVERTISEMENT

சென்னை: பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து, மூன்று மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து ஆற்றிய உரையின்போது, என்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னால், மூன்று மகிழ்ச்சியான செய்திகளை, என் மனதில் ஆழமாக பதிந்திருக்கக்கூடிய செய்திகளை அதிலே குறிப்பிட்டு ஒரு மூன்று செய்திகளை உங்களிடத்தில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி

முதலாவது, நேற்றையதினம் கோட்டையில், காவல் துறையின் சார்பில் புதிய பணி ஆணைகள் வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சிநடைபெற்றது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில், அப்பொழுது எனக்கு அருகில் இருந்த டி.ஜி.பி.-யிடத்திலே ஒரு கேள்வியைக் கேட்டேன், இன்றைக்கு பணி ஆணைகள் வழங்குகிறோம், அது எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்று கேட்டேன். 17 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு அந்த பணி ஆணை வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுச் சொன்னார். அதோடு நிறுத்தாமல், இன்னும் ஒரு முக்கியமான செய்தியைச் சொன்னார். வழங்கப்பட்டிருக்கக்கூடிய அந்த 17 பேரில், 13 பேர் பெண்கள் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த 13 பெண்கள் என்னிடத்தில் அந்த ஆணையைப் பெறுவதற்காக வந்தபோது, மிடுக்கோடு வந்து என்னிடத்தில் அந்த ஆணையைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ADVERTISEMENT

அடுத்து, அதேபோல் இன்று காலையில் இந்த நிகழ்ச்சிக்காக நான் காரில் வந்துகொண்டிருந்தபோது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, ஒரு செய்தியைச் சொன்னார். இந்த புதுமை பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். ஆகவே, இது இரண்டாவது மகிழ்ச்சி.

மூன்றாவதாக மகிழ்ச்சி, அமைச்சர் நாசர் சொன்னது. இந்தக் கல்லூரிக்கு ஏற்கனவே நான் 33 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வந்திருப்பதாகவும், இந்தக் கல்லூரியினுடைய ஆண்டு விழாவில் பங்கேற்றதை அவர் நினைவுப்படுத்தி எடுத்துச் சொன்னார்.

அப்படிப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு என் உள்ளத்திலே சுமந்துகொண்டு தான் இப்போது இந்த புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தினைத் தொடங்கி வைக்க நான் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தப் பட்டாபிராம், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி-க்கு நான் வந்திருப்பதை உள்ளபடியே பெருமையாகவே கருதிக் கொண்டு இருக்கிறேன்.

இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!

வணிகத்தின் பெரும்பகுதியை சமூக சேவைக்குப் பயன்படுத்தியதால், எல்லோரும் அவரை ‘தரும மூர்த்தி’என்று சொன்னார்கள். கல்வியை பலருக்கும் எட்டாக்கனியாக அந்தக் காலத்தில் சிலர் மாற்றி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட காலத்திலேயே, அனைவருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பல்வேறு இடங்களில் பள்ளிகளை நிறுவினார் அவர். சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டை, பாரிமுனை, இந்த பட்டாபிராம் என்று பல இடங்களிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். 1969-ஆம் ஆண்டு அரசு நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட கல்லூரி இது. திராவிட முன்னேற்றக் கழகதினுடைய அரசு முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில், அரசு நிதி உதவியோடு தொடங்கப்பட்ட கல்லூரி இது. 

இன்று தொடக்கப்பட்டிருப்பது ஒரு அற்புதமான திட்டம்தான், திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருக்கக்கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களது பெயரால் தொடங்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புதுமைப் பெண் என்கிற ஒரு திட்டம்!

ஏன் இந்த புதுமைப் பெண் திட்டத்திற்கு இராமாமிர்தம் அம்மையார் அவர்களது பெயரை வைத்திருக்கிறோம் என்று கேட்டீர்களானால், அந்த அம்மையார் அவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கையெல்லாம் எப்படி இருந்தது என்று உங்களுடைய முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள், நீங்களும் தெரிந்திருப்பீர்கள். அந்த மூடநம்பிக்கை காரணமாக பெண்கள் முடக்கப்பட்டு வைத்திருந்தார்கள்.
அப்படி முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்தவர்தான் அந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். 100 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தந்தை பெரியார் அவர்களுடன் இணைந்து மகத்தான் புரட்சியை நடத்தியவர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். 1938-ஆம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காக திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், பேரணி நடந்தது. அந்தப் பேரணியில் பங்கேற்ற பெண்மணி தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். அதனால்தான், திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகளை வழங்கியபோது, முதல் விருதாக பேரறிஞர் அண்ணா அவர்கள் முடிவெடுத்து யாருக்கு வழங்கினார்கள் என்று கேட்டீர்களனால், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்குத்தான் அந்த அந்த முதல் விருதை வழங்கி பெருமைப்படுத்தினார்கள். அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு செய்தியைக்கூட உங்களுக்கு சொல்ல வேண்டும். இராமாமிர்தம் அவர்கள் பிறந்த போது அவரது குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தார்கள். அந்த அம்மையாரை வளர்ப்பதற்கு அவரைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய தாய் மிகுந்த சிரமப்பட்டார்கள். அப்படிப்பட்ட சிரமம் அடைந்த காரணத்தினால் என்ன செய்தார்கள் என்றால், தனது பிள்ளையை அந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டவர்தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். அப்படி பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட இராமாமிர்தம் அவர்கள் பெயரால்தான் இந்த பல்லாயிரக்கணக்கான பெண் பிள்ளைகள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய ஒரு அற்புதமான திட்டத்தை நாம் இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம்.

இந்தத் திட்டம் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தது யார் என்பது உங்களுக்குத் தெரியும். டெல்லியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் தான் அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் குடியரசு நாள் அணிவகுப்பு நடந்தது. அந்த அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி ஒன்று வந்தது. அந்த அலங்கால ஊர்தியில் என்ன சிறப்பு என்று கேட்டால், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மகளிர்கள் ஏழு பேர். அந்த ஏழு பேர்களின் சிலைகளை அதில் வடிவமைத்து அந்த பேரணியில் அணி வகுத்து வந்தது. அந்த ஏழு பேரில் ஒருவர் யாரென்று கேட்டால், இராமாமிர்தம் அவர்களின் சிலையும் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, அவருடைய பெயரால்தான் இந்தத் திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகள், கல்லூரிக்கு போகாமல் ஆகக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டம். இந்த மூவலூர் அம்மையார் பெயரால் உயர்கல்வி உறுதித் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், இந்தத் திட்டத்தின் மூலமாக 6-ஆம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள், அவர்கள் தொடர்ந்து 12-ஆம் வகுப்பு வரை படித்து, முடித்து, மேற்படிப்பிற்கு, கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால், கல்லூரிக்கு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிற இந்தத் திட்டத்தை நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT