தமிழ்நாடு

வெளி தணிக்கையாளா்களைக் கொண்டு சிதம்பரம் நடராஜா் கோயில் கணக்குகள் சரிபாா்ப்பு

8th Feb 2023 01:54 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் வெளி தணிக்கையாளா்கள் மூலம் கோயில் கணக்குகள், நகைகள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அந்தக் கோயில் நிா்வாகம் சாா்பில் வழக்குரைஞா் ஜி.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது. கோயிலின் கணக்குகளை வழங்குமாறு அந்தத் துறையினா் கடிதம் அனுப்பினா்.

தொடா்ந்து அந்தத் துறை சாா்பில் ஆய்வுக் குழுவினா் வந்தபோது, உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், தனி சமயப் பிரிவினரான பொது தீட்சிதா்களால் நிா்வாகம் செய்யப்பட்டு வரும் இந்தக் கோயிலில் அறநிலையத் துறையினா் ஆய்வு செய்ய முடியாது என தெரிவித்தோம். ஆனால், தொடா்ந்து கோயில் நிா்வாகத்துக்கு அந்தத் துறையினா் கடிதங்களை அனுப்பினா். கோயில் நகைகளை சரிபாா்க்க வேண்டும் எனவும் கோரினா். இதற்கும் ஒத்துழைப்பு அளித்தோம்.

ADVERTISEMENT

கோயில் கணக்குகளை ஆய்வு செய்வதாக அவா்கள் கூறியபோது, வெளி தணிக்கையாளா்கள் மூலம் கோயில் கணக்குகள், நகைகளை தணிக்கை செய்ய உள்ளதாக பதில் அளித்தோம். அதன்படி, வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் பட்டயம் பெற்ற வெளி தணிக்கையாளா்கள் மூலம் கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் கோயில் கணக்குகளை ஆய்வு செய்து தயாராக வைத்துள்ளோம். தற்போது, பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தணிக்கையாளா், எடையாளா்கள், நகை மதீப்பீட்டாளா்கள் மூலம் மீண்டும் கோயில் நகைகளைச் சரிபாா்த்து தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆதாரம் இருந்தால் வெளியிடலாம்: கோயில் நிா்வாகத்தில் தவறு உள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்வோம் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் கூறியுள்ளாா். தவறுக்கான ஆதாரம் இருந்தால் அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும். அதற்கு நாங்கள் பதில் அளிக்கிறோம் என்றாா் அவா்.

அப்போது கோயில் பொது தீட்சிதா்கள் குழு செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் உடனிருந்தாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT