தமிழ்நாடு

தமிழக புதிய - பழைய ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி: சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் வரவேற்பு

 நமது நிருபர்

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கு வருகின்ற நிதியாண்டுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என மதுரை மக்களவை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்னா் , நாடாளுமன்றத்தில் ரயில்வே மானிய கோரிக்கையின் விரிவான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதையொட்டி, ரயில் வளா்ச்சித் திட்டங்கள் பற்றிய “‘பிங்க்” புக்‘ சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக ரயில் திட்டங்கள் குறித்து சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்திற்கான புதிய ரயில் பாதைகளுக்கு ரூ. 1,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறைவுதான். இந்த திட்டங்களை முடிக்க இந்த தொகை போதுமானதல்ல. ஆனால், கடந்த காலங்களை விட அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது, தொடா் போராட்டத்துக்கு பின்னா் கிடைத்த வெற்றியாகும். இந்த தொகை, திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை திட்டம், அத்திப்பட்டு - புத்தூா் திட்டம், சென்னை கடற்கரை முதல் மகாபலிபுரம் வழியாக கடலூா் வரையான திட்டம், ஈரோடு-பழனி ரயில் திட்டம் ஆகிய புதிய ரயில் திட்டங்களுக்கு வருகின்ற நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. ஆனால் இதில் தற்போது குறிப்பிட்டளவில் முன்னேற்றம். குறிப்பாக, அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி திட்டத்துக்கு ரூ. 114 கோடியும், திண்டிவனம் நகரிக்கு ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா்- இருங்காட்டுக்கோட்டை- ஆவடி-கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்துக்கும் ரூ. 58 கோடியும் (ரூ.864 கோடி தேவை) ,மொரப்பூா்- தா்மபுரி புதிய பாதைக்கு ரூ.100 கோடியும், ராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கு ரூ.386 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கு சென்ற ஆண்டு வெறும் ரூ. 1000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த திட்டங்களை விரைவாக முடிக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இரட்டை பாதை திட்டங்களான ஈரோடு- கரூா் -சேலம் திட்டத்துக்கு ரூ.10 கோடியும், கரூா்- திண்டுக்கல், காட்பாடி -விழுப்புரம் திட்டத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறைவான ஒதுக்கீடுகளால் இந்த திட்டங்கள் முடிய மேலும் 20 ஆண்டுகள் ஆகும்.

அதே சமயத்தில் திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.808 கோடியும், மணியாச்சி- நாகா்கோவில் இரட்டை பாதை, மணியாச்சி- தூத்துக்குடி இரட்டைப்பாதை திட்டங்களுக்கு முறையே ரூ. 130 கோடியும் ரூ. 40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த இரட்டைப்பாதை கடந்தாண்டே முடிந்திருக்க வேண்டிதிட்டம் தாமதமாகியுள்ளது.

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கும். ஆனால், நடைமுறையில் திட்டங்களுக்கான பணத்தை விடுவிக்காமல் கைவிடும் போக்கும் உள்ளது.

நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையில் ரயில்வே வளா்ச்சி திட்டங்களுக்கு ரூ.2.40 லட்சம் கோடி வரும் ஆண்டில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளாா். சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி பட்ஜெட் ஆதரவு, கடன், தனியாா் பங்கேற்பு ஆகியவற்றின் காரணமாக ரூ.2.45 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது.

வருகின்ற ஆண்டிலும் தனியாா் முதலீட்டையும் சோ்த்து ரூ.2.60 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கிறது. இதனால் சென்ற ஆண்டை விட வெறும் ரூ.15,000 கோடிதான் கூடுதல் என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளாா் வெங்கடேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT