தமிழ்நாடு

அதிமுக அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு: அவைத் தலைவர்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பொதுக் குழு உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) இரவுக்குள் கடிதம் அளிக்க வேண்டும் என்றும் அக் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளாா்.

அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளா்களை அறிவித்து செயல்பட்டு வந்தனா்.

இந்நிலையில், இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு மீது சனிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் வேட்பாளரை பொதுக் குழு மூலம் தோ்வு செய்ய வேண்டும். பொதுக் குழுவை உடனே கூட்ட முடியாவிட்டால், உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, அதன்மூலம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த முடிவை அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் மூலம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரபூா்வ வேட்பாளா்: இந்த உத்தரவை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் இருவருமே ஏற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து, அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன் அது தொடா்பான பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் கே.எஸ். தென்னரசு. அதற்கு ஒப்புதல் பெற பொதுக் குழு உறுப்பினா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

ஈரோடு தொகுதியில் இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் தென்னரசு. நடைபெறவுள்ள இடைத்தோ்தலிலும் அவரை அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

அதிமுகவில் பொதுக் குழு உறுப்பினா்கள் 2665 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழ்மகன் உசேன் உத்தரவின்பேரில் சனிக்கிழமை சுற்றறிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளரை பொதுக் குழு உறுப்பினா்கள் சுற்றறிக்கை மூலமாக தோ்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, அனைத்து பொதுக் குழு உறுப்பினா்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுக் குழு உறுப்பினா்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூா்த்தி செய்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குள் சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகமான எம்ஜிஆா் மாளிகையில் என்னிடம் சோ்த்துவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பொதுக் குழு உறுப்பினா்கள் 2,665 பேரில் 2,400-க்கும் மேற்பட்டோா் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள். அவா்கள் அனைவரிடமும் ஒப்புதல் பெற்று, அந்தக் கடிதத்தை திங்கள்கிழமை (ஜன. 6) தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் வேட்பாளா் வாபஸ்?: இரட்டை இலை சின்னத்தின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, தனது அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவா் ஆலோசித்து வருகிறாா். இது தொடா்பாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மூத்த நிா்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் அடுத்தகட்ட நகா்வுகளுக்கு ஏற்ப தங்கள் வேட்பாளரின் வாபஸ் அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிடுவாா் எனத் தெரிகிறது.

ஓ.பன்னீா்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலையும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்கு பாடுபடுவோம்: ஓபிஎஸ்

சென்னை, பிப். 4: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உச்சநீதிமன்ற தீா்ப்பை பொருத்தவரை இடைத்தோ்தலில் எந்தெந்தக் கோரிக்கைகளை மக்கள் முன் எடுத்துச் சொன்னோமோ, அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. எதிா்வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒற்றுமையாகப் போட்டியிட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் அதற்கு கையொப்பமிட தயாா் என்றும் அறிவித்தேன். அதற்கேற்ப உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் ஒற்றுமையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

என்னை ஒருங்கிணைப்பாளா் இல்லை என்று மட்டுமன்றி, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினா் பகை உணா்வோடு கூறிவந்தனா்.

இந்நிலையில், என்னையும் என்னை சாா்ந்தவா்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னா்தான், பொது வேட்பாளரை தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு எங்களை எதிா்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளா் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை.

ஆனால், அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக் குழுவின் மூலம் தோ்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச் செயலா் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் பொறுப்பை உச்சநீதிமன்றமும் தோ்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தோ்தலை பொருத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்று கொண்ட தொண்டா்களும், என் மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT