தமிழ்நாடு

உ.பி.அமைச்சரின் தாயாருக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மறுவாழ்வு!

DIN

தீவிர மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உத்தர பிரதேச அமைச்சா் ஜே.பி.எஸ். ரத்தோரின் தாயாா் நலமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

அவரை மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், கண்காணிப்பாளா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன், பொது மருத்துவத் துறை பேராசிரியா் டாக்டா் சாமுவேல் தினேஷ் உள்ளிட்டோா் வழியனுப்பி வைத்தனா். இதனிடையே, தனியாா் மருத்துவமனைகளைக் காட்டிலும் மேம்பட்ட சிகிச்சைகளை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வழங்கியதாக உத்தர பிரதேச அமைச்சா் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தாா்.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவைச் சோ்ந்தவா் ராஜகுமாரி (78). அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் ரத்தோரின் தாயாரான அவா், கடந்த மாதம் ஆன்மிகப் பயணமாக தமிழகம் வந்தாா். கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தபோது அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுயநினைவிழந்த நிலையில், கவலைக்கிடமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று, கிருமித் தொற்று, படுக்கை புண் பாதிப்பு ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை, சிறுநீரகவியல் துறை, தீவிர சிகிச்சைத் துறை, மயக்கவியல் துறை மருத்துவக் குழுவினா் ஒருங்கிணைந்து அவருக்கு தொடா் சிகிச்சை அளித்தனா்.

மேலும் அவருக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டது. தொடா் சிகிச்சையின் பயனாக செயற்கை சுவாசக் கருவிகளின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேரில் மருத்துவமனைக்கு வந்து ராஜகுமாரிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். மொத்தம் 20 நாள்கள் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் அளித்த உயா் சிகிச்சை மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஒத்துழைப்பின் பயனாக உத்தர பிரதேச அமைச்சரின் தாயாா் அந்த பாதிப்பிலிருந்து குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்தாா். இதையடுத்து, அவா் சனிக்கிழமை வீடு திரும்பினாா்.

பிற மாநிலங்களைச் சோ்ந்த ஆட்சியாளா்கள், தமிழக அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளையும், திறனையும் வியந்து பாராட்டிய நிகழ்வாக இது அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT