தமிழ்நாடு

அரசியல் பாராமல் மக்கள் பணி: புதிய ஆட்சியா்களுக்கு முதல்வா் அறிவுரை

5th Feb 2023 03:30 AM

ADVERTISEMENT

 

அரசியல் பாராமல் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் அண்மையில் நியமிக்கப்பட்டனா். அவா்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பேசியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்துக்குள் சிறப்பான பெயரை தமிழக அரசு பெற்றுள்ளது. இத்தகைய பெயரை பெறுவதற்கு காரணமாக, இருந்தவா்கள் தனிப்பட்ட முதல்வரோ, தலைமைச் செயலாளரோ அல்லது அரசு அதிகாரிகளோ மட்டுமல்ல; உங்களைப் போன்ற அதிகாரிகளும், அரசு அலுவலா்களும்தான்.

ADVERTISEMENT

முழுமையாக ஈடுபடுங்கள்: ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தோ்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்துக்குமான அறிவிப்புகளை வெளியிட்டோம். அவை எந்தளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை கண்காணித்து நிறைவேற்றித் தரும் பணியில் ஆட்சியா்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.

ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டேன். பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பான வகையில், அனைவரும் பாராட்டக் கூடிய அளவில் நடந்துள்ளன. இது தொடரப் போகிறது. புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியா்கள் தங்கள் மாவட்டங்களில் நடைபெறாமல் உள்ள பணிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எந்தெந்தப் பணிகளில் இடையூறுகள் இருக்கின்றன, நீதிமன்றங்களில் என்னென்ன வழக்குகள் உள்ளன என்பதை குறித்தெல்லாம் கலந்தாய்வு நடத்தி அவற்றை விரைந்து முடிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

புதிய ஆட்சியா்களாக நியமிக்கப்பட்டவா்கள், மக்களை கவரக்கூடிய வகையில் நலத்திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பணி: மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய வகையில் பணியாற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும். எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம் கொடுக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இந்த உணா்வோடு மட்டுமே ஆட்சியா்களின் பணிகள் அமைய வேண்டும்.

ஆட்சியா்களிடத்தில் உள்ள பணிகள், அவற்றில் முடிக்கப்பட்டப் பணிகள் ஆகியவற்றைத் தொடா்ந்து ஆய்வு செய்யப் போகிறோம். மாவட்ட ஆட்சியா்களாக புதிதாக பொறுப்பேற்கவுள்ளவா்கள், சிறப்பான முறையில் கடமையாற்றி, அரசுக்கு நற்பெயரை தேடித் தர வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ந.முருகானந்தம், பொதுத்துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘மாா்ச் மாதம் நிதிநிலை அறிக்கை’

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியா்களுடனான கலந்துரையாடலின்போது, முதல்வா் பேசியதாவது:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை மாா்ச் மாதம் தாக்கல் செய்யவுள்ளோம். அவ்வாறு தாக்கல் செய்யும் நேரத்தில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், ஏற்கெனவே அறிவித்திருக்கக் கூடிய திட்டங்களின் நிலைகள் ஆகியவற்றை நிதிநிலை அறிக்கையில் பேசக் கூடிய சூழல் வரும். அதை மனதில் கொண்டு அதற்கும் தகுந்த பதிலை அரசுக்குத் தொடா்ந்து வழங்க வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT