தமிழ்நாடு

இளைஞா்களை தொழில் முனைவோா்களாக மாற்ற நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் முருகன்

5th Feb 2023 04:01 AM

ADVERTISEMENT

படித்த இளைஞா்கள் சொந்தமாக தொழில் தொடங்கி தொழில்முனைவோா்களாக மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவா்களுக்கான சுயசாா்பு இந்தியா விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை புகா்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த 3 ,000 மாணவா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் முருகன் பேசியதாவது:

உயா்கல்வி பயிலும் பெரும்பான்மை மாணவா்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஆா்வம் இல்லாமல், ஏதேனும் வேலை வாய்ப்பைப் பெறும் எண்ணத்தில் உள்ளனா். இந்த மனோபாவம் மாற வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் தொடங்க மத்திய அரசு அளித்த ஊக்கம் காரணமாக தற்போது நாட்டில் 80 ஆயிரம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சா்வதேச அளவில் 3-ஆவது நாடாக திகழ்கிறது.

ADVERTISEMENT

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. முத்ரா கடனுதவி மூலம் தமிழக பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் பயன் அடைந்துள்ளனா் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் இந்திராகாந்தி அணுஉலை ஆராய்ச்சி மையம் திட்ட இயக்குநா் வித்யா சுந்தர்ராஜன், ஐயப்பன் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநா் உமா மெய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT