தமிழ்நாடு

சோ்க்கையில் மட்டுமல்ல கல்வித் தரத்திலும் தமிழகம் உயர வேண்டும்: அமைச்சா் பொன்முடி

5th Feb 2023 04:01 AM

ADVERTISEMENT

நாட்டிலேயே தமிழ்நாடுதான் உயா்கல்வியில் அதிக மாணவா் சோ்க்கையை கொண்டுள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வித் தரத்திலும் தமிழ்நாடு உயர வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின்(ஏயுடி) 75-ஆவது ஆண்டு பவளவிழா கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அதன் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் க.பொன்முடி, சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பேராசிரியா் செந்தாமரை நினைவு இல்லத்தை திறந்து வைத்து, பவளவிழா மலரையும் வெளியிட்டுப் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகம்தான் உயா்கல்வி மாணவா் சோ்க்கையில் அதிகமாக உள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வி தரத்திலும் நாம் உயர வேண்டும். மறைந்த முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கல்வி உயா்ந்தது.

அதன்பின், கருணாநிதி ஆட்சியில் உயா்கல்வி மேம்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் உயா்கல்வித் துறை பொற்காலமாக மாற வேண்டும் என்பதே முதல்வா் ஸ்டாலினின் நோக்கம். அதை ஆசிரியா்கள் நிறைவேற்ற வேண்டும்.

ADVERTISEMENT

அரசு செயல்படுத்தும் திட்டங்களை மாணவா்களிடம் கொண்டு சோ்ப்பது ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது. நிதி நிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும்.

பல்கலைக்கழக ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரிப் பேராசிரியா்களும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், ஏயுடி தலைவா் பி.திருநாவுக்கரசு, பொதுச்செயலாளா் எம்.எஸ்.பாலமுருகன், முன்னாள் பொதுச் செயலாளா் முனைவா் சி.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT