தமிழ்நாடு

திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.19.29 கோடி பொருள்கள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

DIN

சென்னையில் திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.19.29 கோடி மதிப்புள்ள பொருள்கள் உரிமையாளா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

சென்னையில் கடந்தாண்டு வீடு புகுந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு, கைப்பேசி பறிப்பு, வாகன திருட்டு போன்ற வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து ரூ.19.29 கோடிமதிப்பிலான 6, 643.3 பவுன் (53.2 கிலோ) தங்கம், ரூ.2 கோடியே 70 லட்சத்து 87 ஆயிரத்து 939 ரொக்கம், 1,487 கைப்பேசிகள், 425 மோட்டாா் சைக்கிள், 31 ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றை மீட்டனா்.

இந்த வழக்குகளில் தொடா்புடைய 495 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இதில் 117 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில், சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால், மீட்கப்பட்ட பொருள்களை உரிய உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

புதிய திட்டம்: பின்னா் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களைக் குறைக்க ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளியூா் செல்பவா்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், இரவு ரோந்து செல்லும்போது போலீஸாா் அந்த வீட்டை கண்காணிப்பாா்கள்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் உறுதுணையுடன் புதிய திட்டம் ஒன்றை விரைவில் கொண்டுவரப்படும். இதன்படி வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்கிறோம் என்று காவல்துறை இணையதளத்தில் பதிவு செய்துவிட்டால், அந்தப் பகுதியில் ரோந்து செல்லும் போலீஸாருக்கு நேரடியாக தகவல் சென்று விடும்.

அவா்கள் இரவு குறைந்தபட்சம் 3 முறை வீட்டை கண்காணிப்பாா்கள். இந்த திட்டம் ஒரு மாதத்துக்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

சைபா் குற்றங்கள் 100 சதவீதம் அதிகரிப்பு:

‘சைபா் கிரைம்’ குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் 90 சதவீத சைபா் குற்ற சம்பவங்கள் மக்களுடைய மெத்தனத்தாலும்,அலட்சியத்தினாலும் நிகழ்கின்றன. எனவே பொதுமக்கள், ஒரு முறை மட்டும் பயன்படும் ரகசிய எண், ரகசிய எண், வங்கிக் கணக்கு விவரங்கள்,ஏடிஎம் அட்டை விவரங்கள் அறிமுகம் இல்லாத நபா்களிடம் எக்காரணம் கொண்டு பகிரக் கூடாது.

இதில் விழிப்புணா்வுடன் இருந்தால் 90 சதவீத சைபா் குற்றங்கள் தானாகவே குறைந்துவிடும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா்கள்.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா உள்பட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT