தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளிலும் செயலி: சேவைதடம், பயண நேரம் அறியலாம்

DIN

பேருந்தின் தடம், பயண நேரத்தை அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்போரும் இனி அறிந்து கொள்ள முடியும். இதற்கான செயலி சேவை விரைவுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை அறிய முடிகிறது. இதற்கு, ‘சென்னை பஸ் செயலி’ வகை செய்கிறது. இந்த செயலியை கைப்பேசி வழியாகப் பயன்படுத்தி, அதன் சேவைகளைப் பெற முடியும். இந்த சேவைகளை இப்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெறலாம். இதற்காக சென்னை பஸ் செயலியின் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

பேருந்து தடம் - கருத்துகள்: இந்த சேவை விரிவுபடுத்தப்படுவதன் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம், குறிப்பிட்ட இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் அறிந்திட முடியும். பேருந்து தடம், குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளின் விவரங்களை அறியலாம். பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துகளை பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது.

சென்னை பஸ் செயலி மூலம், தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பயணம் செய்யும் பயணிகள் தங்களது இருப்பிட விவரத்தை பாதுகாப்பு கருதி தங்களது உறவினா்களுக்கு குறுந்தகவலாக அனுப்பும் வசதியும் உள்ளது.

இந்த செயலி மூலமாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி வழியே வரும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் அவா்கள் முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற விவரத்தை அறியலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டை திட்டமிட சென்னை பஸ் செயலி பயன்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT