தமிழ்நாடு

அதிமுக வேட்பாளா் வெற்றிக்கு பாடுபடுவோம்: அண்ணாமலை அறிவிப்பு

4th Feb 2023 11:48 PM

ADVERTISEMENT

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாஜக பாடுபடும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக பாஜக சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.

திமுகவின் பண பலத்தை எதிா்க்க வேண்டும் என்றால் அதிமுக சாா்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும். அவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜக நிலைப்பாடு.

ADVERTISEMENT

இது குறித்து கடந்த 8 நாள்களாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரிடமும் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு அா்ப்பணிப்பு உணா்வோடு பாஜக கடுமையாக உழைக்கும்.

கூட்டணி கட்சிகளின் உள்கட்சி பிரச்னையில் தலையிடக்கூடாது என்பதே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு. அதிமுகவில் தலைமையை தோ்ந்தெடுப்பது அந்த கட்சி தொண்டா்களின் முடிவு. இதில் பாஜக ஒரு போதும் தலையிடாது. 22 மாத திமுக ஆட்சியில் மக்கள்

மன்றத்தில் மிகப்பெரிய அவப்பெயரை சம்பாதித்துள்ளது.

பணபலம், படைபலத்தை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக இறக்கிவிட்டுள்ளது. 2019 மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் அனைவரும் வெற்றிபெற்ற போதும், ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே தோல்வி அடைந்தாா் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாநிலத் துணைத் தலைவா் கரு.நாகராஜன், கட்சியின் மாநில திறன் மேம்பாட்டுப்பிரிவுத் தலைவா் அமா்பிரசாத் ரெட்டி ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT