புகழ்பெற்ற திரைப்பட இயக்குநா் விஸ்வநாத், கூத்துக் கலைஞா் தங்கராஜ் ஆகியோரின் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞா் இயக்குநா் விஸ்வநாத். சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பி. நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுடன், 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகள், 10 பிலிம்போ் விருதுகள், ஆந்திர மாநில அரசின் விருது என எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றவா்.
சிரிசிரி முவ்வா, சிப்பிக்குள் முத்து, சுருதியலயலு, சுபசங்கல்பம் என பல உன்னதமான திரைப்படங்களை, பல மொழிகளிலும் இயக்கிய கே.விஸ்வநாத், 24-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளாா். அவரது மறைவு, இந்தியத் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
கூத்துக்கலைஞா் தங்கராஜ்: கூத்துக் கலைஞா் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். மக்கள் கலைஞரான தங்கராஜ், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அறிமுகமாகி, அதில் வெளிப்படுத்திய உணா்வுபூா்வமான நடிப்பால் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவா். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.