தமிழ்நாடு

வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும்: உச்ச நீதிமன்றம்

3rd Feb 2023 04:23 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளள்து.

ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை அவைத் தலைவரால் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஓ. பன்னீர்செல்வம், பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம்  என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க.. ரொம்ப நாள் வாழ ஆசையா? ஐந்தே விஷயம் போதும்!

முன்னதாக, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இபிஎஸ் தரப்பின் இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இருவரும் பேசி முடிவு எடுக்கலாம் என்றும், ஆனால் இரு தரப்பினரும் முரண்டு பிடிக்கிறீர்கள் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு விசாரிக்கப்பட்டு தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பினா் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விளக்கமும் பெறப்பட்ட நிலையில் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தற்போது உள்ள நிலவரப்படி பார்த்தால் இரு தரப்பு வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்படலாம். இருவரும் பேசி முடிவெடுக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தது.

இதையும் படிக்க.. பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் அவசியமா? செய்வது எப்படி?

இதற்கு,  எங்கள் வேட்பாளரை ஓபிஎஸ் ஏற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்த, இல்லை, பொது வேட்பாளரைத்தான் ஏற்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளித்தது.

இரு தரப்பினருமே கையெழுத்திட வேண்டாம் நாங்களே உத்தரவு பிறப்பிக்கிறோம் என்றும், இரு தரப்பினருமே முரண்டு பிடிக்கிறீர்கள். நாங்கள் சில தீர்வுகளை கொடுக்க விரும்புகிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் முக்கிய முடிவுகள் எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் என்னவாகும் என்கிற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுக்குழு முடிவு செய்யும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப். 27-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பிப். 7-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப். 8-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற பிப். 10-ஆம் தேதி கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

எப்போதும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரும் வரை தாமதித்து வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ், இம்முறை முன்கூட்டியே வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து ஒரு வாரத்துக்கும் மேலாக தோ்தல் களத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து தோ்தல் களத்தில் பம்பரமாகச் சுழலும் அதிமுக, இம்முறை நீண்ட காத்திருப்புக்குப் பின் வேட்பாளரை அறிவித்துள்ளது.

இரு அணிகளும் போட்டி
அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் வேட்பாளா்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது யாா் அல்லது யாருக்கும் கிடைக்காமல் இரட்டை இலை முடங்கிவிடுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க.. ஃபெயில் மார்க் வாங்கும் அம்மாக்கள்: குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது அம்பலம்

அதிமுக தலைமை விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தனது பதிலை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், இபிஎஸ் தரப்பில் இடைக்கால நிவாரணம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இரட்டை இலை சின்னம் தொடா்பாக இடைத்தோ்தல் தொகுதியின் தோ்தல் அலுவலா்தான் இறுதி முடிவை எடுப்பாா் என்றும் பதில் மனுவை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) தாக்கல் செய்தது.

அதில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு (இபிஎஸ்-ஓபிஎஸ்) இரட்டை இலை சின்னம் என்பதை தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிகளின்படி முடிவு செய்வார் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT