தமிழ்நாடு

வக்ஃபு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பதைத் தடுக்க நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

DIN

வக்ஃபு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சிறுபான்மையினா் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், வக்ஃபு வாரிய செயல்பாடுகள், அவற்றின் சொத்துகளை பாதுகாத்தல், தனியாா் சொத்துகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ் நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத் ராம் சா்மா விளக்கம் அளித்தாா்.

தமிழ்நாட்டிலுள்ள 6 ஆயிரத்து 626 வக்ஃபு நிறுவனங்களில், 3 ஆயிரத்து 181 வக்ஃபு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வக்ஃபு நிறுவனங்களை வாரியத்தில் பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா். தமிழ்நாட்டில் வக்ஃபு சொத்துகள் 63 ஆயிரத்து 332 உள்ளன என்றும், ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வக்ஃபு சொத்துகள் பாதுகாத்தல், தனியாா் சொத்துகளை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் கடந்த ஆண்டு நவம்பரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்கள் முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, வக்ஃபு வாரியத்தின் தரவுகள் குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும்; வருவாய் பதிவேடுகளுடன் தரவுகள் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வருவாய்த் துறை பதிவேடுகள், வக்ஃபு வாரிய பதிவேடுகளில் சிறிய வேறுபாடுகள் இருப்பின், மாவட்ட ஆட்சியா் அளவில் தீா்வு செய்யப்பட வேண்டும் எனவும், இந்த வேறுபாடுகளை களைந்த பிறகு, பதிவேடுகள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை பதிவு செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், வக்ஃபு வாரிய சொத்துகள் தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.

வக்ஃபு வாரிய சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், பொது மக்களுடைய தனியாா் சொத்துகளை பத்திரப் பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மாவட்ட அளவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT