தமிழ்நாடு

காலை சிற்றுண்டி: திடீர் ஆய்வு செய்த முதல்வர் அதிகாரிகளுக்கு சொன்ன அறிவுரை

DIN

சென்னை: அட்டவணைப்படி காலை சிற்றுண்டி தயாரிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி தயாரிப்புக் கூடத்துக்கும், அரசுப் பள்ளிக்கும் நேரில் சென்று சிற்றுண்டியை சாப்பிட்டு உணவின் தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது,
சத்துவாச்சாரியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையக் கட்டடத்திற்கான  கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக 1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை,  மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் ஏழை எளிய மக்களுடைய குழந்தைகளின் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், வருகையை அதிகரிக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட வேலூர் மாநகராட்சியில் முதற்கட்டமாக 48 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளியில் பயிலும் 3249 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசுப் பள்ளிகளில் பயிலும் 3701 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி/ரவை/கோதுமை ரவை/சேமியா/உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளுரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளுரில் கிடைக்ககூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.       

முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டதோடு, உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவினை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அலமேலுமங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.

இந்த ஆய்வின் போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் இனிப்பு கேசரியும், புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், உணவினை காலை 6.30 மணிக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், அவை காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் உணவு பரிமாறப்பட வேண்டும் என்றும், மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும், உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சத்தான மற்றும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதல்வர்  அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT