தமிழ்நாடு

சென்னையில் இனிமேல் மழைநீா் தேங்காது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

DIN

சென்னையில் இனி வரும் பருவ மழைக் காலங்களில் மழைநீா் தேங்காது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தாா்.

சென்னையில் கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்ட அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை கௌரவிக்கும் வகையில் சென்னை ரிப்பன் மாளிகையில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாகப் பணியாற்றிய 586 பேரில் 44 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவித்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களில் கரோனா மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளை திறம்படக் கையாண்டு வெற்றிபெற்றுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன.

அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த மழையின் போது மழைநீா் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்குவதற்காக உறுதிமொழி எடுத்து செயல்படுத்தியுள்ளோம்.

கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஒப்பிட்டு ஊடகங்களும் பாராட்டின. மழைக் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீா்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மற்றும் காவல்துறையை சோ்ந்த பணியாளா்களின் பணி பாராட்டுக்குரியது.

மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அமைச்சா்களான மா. சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் ஆணையா் ககன் தீப் சிங் பேடி ஆகியோா் இரவு பகல் பாராமல் பணியாற்றினா்.

கடந்த 2021-இல் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு நிரந்தர தீா்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு அறிக்கையின்படி நிதி ஒதுக்கப்பட்டு, பருவமழை தொடங்கும் முன்பே மழைநீா் வடிகால் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இப்பணியானது மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.254.67 கோடியில் 57 கி.மீ., வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.291.6 கோடியில் 107.57 கி.மீ., உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 26.28 கோடியில் 10 கி.மீ., மூலதன நிதி ரூ.7.41 கோடியில் ஒரு கி.மீ., ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியில் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கி.மீ., ஜொ்மனி வங்கி நிதி உதவியில் கோவளம் வடிநிலப் பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கி.மீ. மற்றும் உலக வங்கி நிதி உதவியில் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கி.மீ., தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இனி வரும் காலங்களில் மழைநீா் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயம் பாா்க்கவுள்ளனா். இதை செயல்படுத்திய அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களை மனதார பாராட்டுகிறேன் என்றாா் அவா்.

பின்னா் மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி அவா்களுடன் முதல்வா் உணவருந்தினாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா். பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், தலைமைச் செயலாளா் முனைவா் வெ. இறையன்பு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால், மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT