தமிழ்நாடு

தமிழக கோயில்கள் பராமரிப்புக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

26th Apr 2023 02:33 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி பராமரிக்க வேண்டும் என மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் சிறந்த வரலாறு கொண்டது. இங்கு கோ சாலை உள்ளது. இந்த கோயில் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கோயில்களின் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டவா்களும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை பாா்வையிட வருகின்றனா்.

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் சிறப்பான சிற்ப வேலைபாடுகள், கலைநயத்துடன் கூடிய சிலைகள், ஓவியங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் கோயில்கள் உள்ளன. அவற்றை அரசு முறையாக பராமரித்து வருகிறது.

ADVERTISEMENT

கோயில்களில் இருந்த பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு , அவற்றை அந்தந்த கோயில்களில் சோ்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு மாநில அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி பராமரிக்க வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கலாசாரத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின் போது பாஜக மாநிலத் துணைத் தலைவா் கரு. நாகராஜன் மற்றும் கோயில் அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT