தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு முடிவு தேதி மாற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

26th Apr 2023 01:04 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலகத்தில் சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து, மாநகர நூலக ஆணைக்குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கவிஞா் மனுஷ்யபுத்திரனுக்கு நூல்களை வழங்கினாா்.

இதையடுத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின்ஆலோசனைகளை பெற்று வாசகா் வட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் 156 நூலகங்கள் உள்ளன. இதில் எவ்வாறு புதிய திட்டங்களை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

ADVERTISEMENT

மதுரையில் கலைஞா் நூலக பணிகள் நிறைவடையவுள்ளன. நூலகத்தில் வைப்பதற்கு 1.25 லட்சம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. ஜூன் 3-ஆம் தேதி திருவாரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கோட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா். இதைத் தொடா்ந்து முதல்வரிடம் தேதி பெறப்பட்டு கலைஞா் நூலகம் திறக்கப்படும்.

நீட் தோ்வுக்கு பிறகு...: பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை நீட் தோ்வுக்கு பின்னா் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். பிளஸ் 2 தோ்வு முடிவுகள், மே 7-ஆம் தேதி நீட் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என பல்வேறு ஆசிரியா்கள் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. அதைக் கருத்தில் கொண்டு மாணவா்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT