தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நிழல் இல்லா நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
நிழல் இல்லா நாள் என்பது பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது சூரிய கதிர்வீச்சு நேர் செங்குத்தாக விழக்கூடிய நாளாகும். இது வருடத்திற்கு இரு முறை கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையே இருக்கும் இடங்களில் நிகழும். நமது இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து (குஜராத்) தென் பகுதி இறுதி (கன்னியாகுமரி) வரை இருக்கும் இடங்களில் நிகழக்கூடியது.
இந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 வரை நிழலில்லாத நாள் தமிழ்நாட்டில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. ஒரே அட்ச ரேகையில் இருக்கும் பகுதிகளில் (சென்னை, திருவள்ளூர்) ஒரே நாளில் நிழல் இல்லாத நாள் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிழலில்லா நாளையொட்டி நிழல் இல்லாத நாளின் செயல்முறை, ஒவ்வொரு இடத்திலும் மதிய நேர அளவீடு மற்றும் பூமியின் ஆரத்தை அளக்கும் செயல்பாட்டில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது.
மேலும் ஒரு முன்னோட்டமாக எராடோஸ்தீனஸ் முறையில் பூமியின் ஆரத்தை கண்டுபிடிக்கும் செயல்பாடும் நடத்தப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, இராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் இந்த கள செயல்பாட்டில் நேற்று காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஈடுபட்டனர்.