தமிழ்நாடு

அதிமுக ஆட்சி மீதான தணிக்கைத் துறை புகார்கள் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

26th Apr 2023 04:28 AM

ADVERTISEMENT

அதிமுக ஆட்சி குறித்த தணிக்கைத் துறையின் புகார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-
 கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் எந்த அளவுக்கு நிர்வாகச் சீர்கேடுகளும், முறைகேடுகளும் வியாபித்திருந்தன என்பது கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 கடந்த ஆட்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் என இரண்டு துறைகளையும் அப்போதிருந்த முதல்வர் பழனிசாமியே வைத்திருந்தார்.
 இந்த இரண்டு துறைகளிலும் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதற்கான அடிப்படை விதிகள் அனைத்தும் எப்படியெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன; ஊழல் எப்படியெல்லாம் ஊக்கப்படுத்தப்பட்டது என்பதை புள்ளிவிவரங்களுடன் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 91 ஒப்பந்தப் புள்ளிகள் ஒரே கணினியைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதைத் தவிர்த்து, போலியான ஒப்பந்ததாரர்களை ஏலத்தில் பங்கேற்றது போன்று கணக்கு காண்பித்துள்ளனர்.
 நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித் துறையிலும் ஊழல் நடைபெற்றதை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீட்டு கட்டும் திட்டத்தின்கீழ், 5.09 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன.
 மடிக்கணினி திட்டம்: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட கணினிகளில் 55 ஆயிரம் கணினிகள் பல ஆண்டுகளாக விநியோகம் செய்யப்படவில்லை.
 மாணவர்களுக்கு காலணி வழங்கும் திட்டத்திலும் ரூ.5.47 கோடி வீணாக்கப்பட்டுள்ளது.
 பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை எனப் பல்வேறு துறைகளில் மோசமான நிர்வாகத் திறமையின்மையால் ஏராளமான நிதி இழப்பு, நிதி மோசடியும், ஊழலும் நடந்துள்ளன.
 இதுதொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
 குட்கா விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை
 குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைக்கான தடை ஆணை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
 இதனிடையே, அந்த தடை ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
 அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் வாதத்தினை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது.
 அதன்படி தற்போது தமிழகத்தில் குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றுக்கான தடையாணை நீடிக்கிறது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT