சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னை செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத் துறையினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செட்டிநாடு குழுமம் சிமென்ட் தொழிற்சாலை,மின்சாரம் தயாரிப்பு,மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.
இந்த குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித் துறை, அந்த குழுமத்துக்கு சொந்தமான சுமாா் 50 இடங்களில் சோதனை 9.12.2020-இல் செய்தது. பல நாள்கள் நடைபெற்ற இந்த சோதனையில், அந்த நிறுவனம் சுமாா் ரூ.700 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கணக்கில் வராத ரூ.23 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை, திருச்சியில் அந்தக் குழுமத்துக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா். சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாா் தொடா்பாக சோதனை நடைபெற்ாக அத்துறையினா் கூறினா்.
இந்த சோதனை 5 இடங்களில் நிறைவு பெற்றது. எழும்பூரில் அந்த குழுமத்தின் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சோதனை நடைபெற்றது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை அமலாக்கத்துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.