தமிழ்நாடு

‘பிச்சைக்காரன்-2’ படத்துக்கு தடை கோரி உயா்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

15th Apr 2023 11:51 PM

ADVERTISEMENT

 

நடிகா் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்-2’ படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்தப் படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜகணபதி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகா் ஆா்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தை தயாரித்தது.

2016-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கதையை அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகா் விஜய் ஆண்டனி ‘ பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளதாகவும், எனவே அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்தப் படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயா்நீதிமன்றம் விசாரணையை ஏப்.18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரைப்பட உதவி இயக்குநா் பரணி தொடா்ந்துள்ள இந்த வழக்கில், தான் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாகவும், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கதையை பல தயாரிப்பாளா்களிடம் கூறியிருந்ததாகச் சுட்டிக் காட்டியிருக்கிறாா். அதே கதையை தற்போது ‘பிச்சைக்காரன்- 2’ எனும் பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.18) விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT